ஈரோடு அகில்மேடு வீதியில் குமார் என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார் . இவரது கடையில் 3 நாட்களுக்கு முன்பு டீ குடிக்க வந்த வாலிபர் ஒருவர் கடையில் கல்லாப் பெட்டி மேல் இருந்த செல்போனை திருடி சென்றார்.
இதனால், அதிர்ச்சியடைந்த குமார் தனது கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார் வையிட்டார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனை எடுத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது.
மேலும், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு குமாரின் டீ கடைக்கு வந்த ஒரு பெண் தன்னுடைய மகன் கடையில் இருந்த செல்போனை திருடும் காட்சியை செல்போனில் பார்த்ததாகவும், தனது மகன் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என்றும் கூறி செல்போனை திருப்பி ஒப்படைத்துள்ளார்.
மேலும், திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைத்தது பற்றியும், செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த, சமூக வலைதளங்கள் மற்றும் நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ் நேயர்களுக்கும் குமார் தனது நன்றிகளை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.