கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு வேலை முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளாளபாளையம் பிரிவில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்தார். விபத்து குறித்து கோபி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதே போன்று கடந்த 2019ம் ஆண்டு ஆட்டோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த சிவக்குமார், பசுவராஜ் ஆகியோர் மீது அரசு பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்தும் கோபி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்குகள் கோபியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, பழனிச்சாமிக்கு 1,85,386 ரூபாயும், சிவக்குமார் மற்றும் பசுவராஜீற்கு தலா தலா 1,50,691 ரூபாயும் வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால், போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காத நிலையில், கோபி பேருந்து நிலையத்திலிருந்த அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்து அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.