ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தளங்களில் மிகவும் முக்கியமானது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில். இந்த கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனையொட்டி குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு குண்டத்தில் எரிகரும்பு, விறகுகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குண்டம் இறங்கும் பக்தர்கள் நேற்று முதலே குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு தலைமை பூசாரி ராமானந்தம் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார்.
தலைமை பூசாரியை தொடர்ந்து கோவில் பூசாரிகள், வீரமக்கள் குண்டம் இறங்கினர், தொடர்ந்து குண்டம் இறங்க நீண்ட வரிசையில் கைக்குழந்தைகளுடன் காத்திருந்தார்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
குண்டம் இறங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் இறங்கினர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட அளவிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த குண்டம் இறங்கும் நிகழ்வினை தொடர்ந்து நாளை தேரோட்ட நிகழ்ச்சியும்,13 ம் இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் கோபி நகருக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 14 ம் தேதி கோபியில் தெப்போற்சவமும், 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவானது 20 ம் தேதி மறுபூஜையுடன் நிறைவு பெறவுள்ளது.