உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமி அவர்களின் தலைமையில் மற்றும் சென்னை மாநகராட்சியின் தேர்தல் அதிகாரிகள் இணைந்து 01.04.2024 (நேற்று) சென்னை எலியட்ஸ் கடற்கரையில் 100 சதவீதம் நெறிமுறை வாக்கு (100% Ethical Voting) பதிவை வலியுறுத்தும் விதமாக மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபெற்ற இந்த பேரணியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமி அவர்கள் பேசுகையில்,
பாமரனை பாராளும் அமைச்சராக்கவும், பாராளுபவரை சாதாரண மனிதனாகவும் மாற்றும் சக்தி கொண்ட சாமானிய குடிமகன்களுக்கு இந்திய ஜனநாயக நாட்டில் வழங்கப்பட்ட உச்ச பட்ச ஒரே உரிமை வாக்குரிமை மட்டுமே என்று குறிப்பிட்டார்.
மேலும், வருகிற 19.04.2024 ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பொன்னான வாக்குகளை செலுத்திட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள இந்த தொடர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிற 15.04.2024 அன்று மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நிறைவு பெறும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.