Type Here to Get Search Results !

800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்

ஈரோடு,  ஜூலை 17-

தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.





தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், 

''அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவில்லை. திமுக ஆட்சியில்தான் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிமுக ஆட்சியில் மாற்றியமைத்த ஊதிய விகித்தை மீண்டும் சீரமைத்து வழங்கப்பட்டது‌. 

5 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடனடியாக புதியதாக ஊழியர்களை நியமிக்க முடியாத நிலையில், அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

இதனால் கடந்த கோடை விடுமுறையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

தற்போது, 8 சிஎன்ஜி பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து பரிசோதனை அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டதில், முதல் கட்டமாக 100 பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 

விரைவில் மின்சார பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்படும். மீதமுள்ள பேருந்துகள் மற்ற நகரங்களில் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு பிரச்சினை, காலம் காலமாக இருக்கிறது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசியதால், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த பிரச்சினை இல்லை. மேலும், ஒரு சில புதிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண உயர்த்தை வசூலிக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில், புதியதாக ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்துநரைக் கூட பணியமர்த்தவில்லை. இதனால் 2,000 பேருந்து வழித்தடங்களில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. 

தற்போது அதில் 800 வழித்தடங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகிறது. மீதமுள்ளதையும் புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஆய்வு செய்து, தேவை இருப்பின் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.