தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.
தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 15.09.2024 முதல் 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள் ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் இரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் கடந்த 2023 தீபாவளி விற்பனையாக ரூ.1.01 கோடி மற்றும் கோபிசெட்டிபாளையம் விற்பனை நிலையத்தில் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்றுள்ளது. 2024 தீபாவளி இலக்காக வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் ரூ.1.40 கோடியும், கோபிசெட்டிபாளையம் விற்பனை நிலையத்தில் ரூ.38.00 இலட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட உதவிட வேண்டும்.
இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி, முதுநிலை மேலாளர் கோ.ஜெகநாதன், மேலாளர்கள் பாலமுருகன் (அரசுத்திட்டம்), ரா.மோகன்குமார் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி), கைத்தறித்துறை உதவி இயக்குநர் பொ.தமிழ்செல்வன், ஈரோடு வசந்தம் விற்பனை நிலைய மேலாளர் பிரியா உட்பட கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.