ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் (17.09.2024)-ஐ முன்னிட்டு, "சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (16.09.2024) ஏற்றுக் கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்கள்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டும் தான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றது. அவரது சுயமரியாதைச் சிந்தனையால், தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது. அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது.
இன்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம். சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டு தோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், "சமூக நீதி நாள்" உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக உறுதி மொழியினை அணுசரிக்க
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து , இன்று (16.09.2024) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும், "சமூக நீதிநாள்" உறுதி மொழியான,
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.