Type Here to Get Search Results !

198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் - கலெக்டர் தகவல்.


தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அறிவிப்பின்படி ஈரோடு மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் 22.11.2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பொதுவான புற்றுநோய்களான வாய்புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று விதமான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை குறைத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதுணை புரிவதே ஆகும்.

18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையும், பொது மக்கள் பணிபுரியும் இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அரசு மருத்துவ குழுவினர். தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக முகாம் அமைத்து அரசால் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள். 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள். 8 அரசு மருத்துவமனைகள் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையங்கள் உட்பட 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி முகாம்களுக்கு மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி சென்று அனைவரையும் முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளிலும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகின்றனர். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 4,23,478 நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனைக்கும். 2,21,765 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கும். 2.21,816 நபர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 2.08.699 நபர்களில் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 22 பேருக்கு வாய் புற்றுநோயும். 86,063 பேருக்கு மார்பக புற்றுநோய்க்காக பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 22 பேருக்கு மார்பக புற்றுநோயும், மேலும், கர்ப்பப்பை புற்றுநோய்க்காக 62,880 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 9 பேருக்கு நோயும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை பழக்கம், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு பார்சல் செய்யப்பட்ட சூடான உணவுகள் உட்கொள்ளுதல், பயன்படுத்திய எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள். வேதிப்பொருள் பயன்பாடுகளாலும், நுண்கதிர் வீச்சு படுதல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களாலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ முன்பரிசோதனைகள் மற்றும் மனஅழுத்தம் இல்லா வாழ்வியல் முறை, சரியான உணவுப் பழக்கவழக்கம், யோகா போன்றவை கடைபிடிப்பது அவசியமாகும். உணவுப் பழக்க வழக்கங்களில் அதிகமாக காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொது மக்களும், இல்லம் தேடி வரும் மருத்துவப் பணியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை பெற்று தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்ட மையங்களை அணுகி, புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்பரிசோதனைகளை மேற்கொண்டு தங்கள் இன்னுயிரை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.



சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் திருமதி.லட்சுமி (வயது 60) க/பெ.ரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

நான் ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு நீண்ட நாட்களாக கை வலி இருந்து கொண்டே இருந்தது. கை தூக்குவது கூட சிரமமாக இருந்தது. இதனால் எனது அன்றாட வேலைகளை செய்வது கூட இயலாமல் இருந்தது. இந்நிலையில் எங்கள் பகுதியில் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சென்று எனது பிரச்சனைகளை கூறினேன். உடனடியாக மருத்துவர்கள் எனக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் எனக்கு மார்பக புற்றுநோய்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்து, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைந்தனர். அங்கு மீண்டும் எனக்கு பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோய்க்கு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், தற்பொழுது புற்று நோய்க்கான சிகிச்சையினை மேற்கொண்டு வருகிறேன். நீண்ட நாட்களாக எனக்கு இருந்த தொந்தரவிற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கே தயக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கே வந்து மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்வதோடு மேல்சிகிச்சைக்கான வழிமுறைகளை அளித்து,  தயக்கங்களை போக்கி நோய் தொற்றின் வீரியங்களை உணர்த்தும் வகையில், இதுபோன்ற திட்டங்களை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.