ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு சாகுபடியில் நடவு செலவு அதிகரிப்பு, இடை உழவுப் பணிகள், அறுவடை ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இயந்திர சாகுபடியே சிறந்த தீர்வாக உள்ளது என ஆப்பக்கூடல் சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் தெரிவித்தார்.
கடந்த 1964 ஆம் ஆண்டு சக்தி நகரில் தொடங்கப்பட்ட சக்தி சர்க்கரை ஆலை நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. கரும்பு சாகுபடிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்பதை உணர்ந்து இந்தியாவிலேயே முதல் முறையாக 1995 ஆம் ஆண்டு அகல பார் நடவு முறையையும், 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து கரும்பு அறுவடை இயந்திரத்தை இறக்குமதி செய்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம்.
தற்பொழுது பரவலாக இந்தியா முழுவதும் கரும்பு அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர்கள் கரும்பு அறுவடை இயந்திரங்களை வாங்கி சர்க்கரை ஆலைகளின் வழிகாட்டுதலுடன் விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை செய்து கொடுத்து வருகின்றனர். தற்பொழுது இயந்திரங்கள் அதிகம் உள்ள நிலையில் அதற்கான ஆபரேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் சிஎன்ஹெச் கரும்பு அறுவடை இயந்திர உற்பத்தி நிறுவனமும் சக்தி பவுண்டேஷன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 450 பேருக்கு கரும்பு இயந்திர ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது கரும்பு அறுவடையில் இயந்திர பயன்பாட்டின் மூலம் ஒரு மணி நேரத்தில் 40 டன் கரும்பு அறுவடை செய்யலாம். இதன் மூலம் ஒரு டன்னுக்கு ரூ.300 வரை மட்டுமே செலவாகும். கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு வெட்டு கூலி அதிகரிப்பு, சாகுபடி செலவு உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் லாபகரமான கரும்பு சாகுபடிக்கு இயந்திரங்களின் பயன்பாடு அவசியமாக உள்ளது, என குறிப்பிட்டார்.
சிஎஸ்ஆர்-சிஎன்ஹெச் திட்டத் தலைவர் கவிதாஷா பேசுகையில்,
இந்தியாவில் நான்காவது பயிற்சி மையமாக தமிழகத்தில் கரும்பு இயந்திர ஆபரேட்டர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம்,உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தமிழகத்தில் ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள கரும்பு அறுவடை இயந்திர ஆபரேட்டர்களின் திறன் மேம்பாடு பயிற்சி மையம் ஆண்டுக்கு 450 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும், என குறிப்பிட்டார்.
முன்னதாக சக்தி சர்க்கரை ஆலை துணைத்தலைவர் வி திருவேங்கடம் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில், சிஎன்ஹெச் நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் சந்திப் குப்தா, விற்பனைத் தலைவர் டி.பாஸ்கர், சேவை தலைவர் எம்.ரமேஷ் குமார், சக்தி சர்க்கரை ஆலை ஆப்பக்கூடல் பிரிவு துணை பொது மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், முதுநிலை பொது மேலாளர் வி.பத்ரி நாராயணன் நன்றியுரை ஆற்றினார்.