குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், மாவட்ட தொழில் மையத்தில் உற்பத்தி மற்றும் சேவைக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டமும் (PMEGP), வியாபார நடவடிக்கைக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமும் (UYEGP), உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நடவடிக்கைக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டமும் (AABCS), குறு உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறுவன நடவடிக்கைக்கு பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமும் (PMFME) செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (01.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நிர்வாகம், கணக்கு, முன்னுரிமை, பதிவு (மு) புதுப்பித்தல், மனுக்கள், பரிந்துரைத்தல், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், தொழில்நெறி வழிகாட்டல், தன்னார்வ பயிலும் வட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றதை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக, வரப்பெறும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் கணேசன், தொழிலாளர் உதவி ஆணையர்கள் த.முருகேசன் (ச.பா.தி), வெ.மு.திருஞானசம்பந்தம் (அமலாக்கம்), உதவி இயக்குநர்கள் ஆனந்தகுமார் (அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்), திருமதி.ரா.ராதிகா (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. டி.டி.சாந்தி (தொழில்நெறி வழிகாட்டல்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.