ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் தலமலைப் பகுதிகளில் 3 நாட்கள் இயற்கை முகாம் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் இருக்கும் சுற்றுச்சூழலுடன் தங்களுடைய தொடர்பைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இயற்கை முகாம் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இம்முகாமில் 7 அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் 3 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள NGC/ECO மன்றத்தைச் சார்ந்த 48 மாணவர்கள். 10 பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அரேப்பாளையம் MYRADA-வில் 3 நாட்கள் முகாமிட்டு இருந்தனர்.
முதல்நாள் நிகழ்வாக MYRADA-வில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கே.சுதாகர் இ.வ.ப., அவர்கள் முகாமினை துவக்கி வைத்து, பூமி தோன்றியது முதல் மனிதன் தோன்றிய வரலாறுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும், மனிதனுக்கு முன்பே இப்பூமியில் மற்ற அனைத்து உயிரினங்களும் வாழ்ந்து வந்தது குறித்தும், மனிதன் தோன்றிய பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்துக் கொண்டுள்ளது குறித்தும், பாக்டீரியா முதல் நீலத்திமிங்கலம் வரை உயிரிபன்மயங்கள் இல்லையெனில் மனிதன் இப்புவியில் உயிர்வாழ முடியாது என்றும் எடுத்துரைத்தார்.
.jpeg)
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வனங்களின் அழகு, வனவிலங்குகளின் முக்கியத்துவம், வாழிடம், உணவு முறை, மலைப்பகுதிகளில் பேருந்தில் பயணிக்கும் பொழுது கடைபிடிக்க வழிமுறைகள், காடுகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் மற்றும் கொண்டை ஊசிவளைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இம்முகாமில் மாணவர்களுக்கு கிழக்கு தொடர்ச்சி மலை, மரங்கள், புறா, சிறுத்தை, யானை, செந்நாய், மான், குரங்கு போன்ற விலங்குகளின் வாழிடங்களைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சத்தியமங்கலம் சமவெளிப் பகுதி, பவானிசாகர் அணைக்கட்டுப்பகுதிகளைக் கண்டு ரசித்தனர். மேலும், ஆசனூர். காராப்பள்ளம் (APW) வேட்டைத் தடுப்பு முகாமிற்குச் சென்று அங்குள்ள watch tower மேல் ஏறி மேற்குத் தொடர்ச்சி மலை, சத்தியமங்கலம் சமவெளிப்பகுதி, சோலார் உதவியுடன் இயங்குகின்ற விளக்குகளையும், குடிநீர் வசதிகளை பற்றியும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
.jpeg)
காட்டு விலங்குகளுக்காக கோடை காலங்களில் குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த குடிநீர்தொட்டிகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. வன சோதனை சாவடி பணிகள் மற்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, வெளிநாட்டு தாவரங்களை வனப்பகுதிகளில் அகற்றவும், (சென்னா களைச்செடிகள்) அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் இயற்கை முகாமானது MYRADA-வில் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுடன் பசுமை படையின் நோக்கம் மரங்களின் பயன்கள். மழைநீர் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து கலந்துரையாடி, துணிப்பைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்து கூறி மாணவர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. மேலும், பல்லுயிர் உயிர் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து மாமிச உண்ணிகள், (புலி, சிறுத்தை, கழுதைப் புலி,) வாழ்விடம். அதன் வாழ்வியல் முறை பற்றி வனத்தில் சொல்லிய விதம் எங்கள் வாழ்வில் நாங்களும் வனத்துறை பணியில் சேர்ந்து வளரும் தலை முறைக்கு இந்த இயற்கையோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற தூண்டுதல் உருவானது. மனித விலங்கு மோதல்கள் காரணங்கள் அதற்கான நிவாரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து மாணவடன் கலந்துரையாடப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் வாழ்வியல் மறைமுக அடையாளங்களை கொண்டு விலங்குகளை அடையாளம் காணுதல் முக்கியத்துவம் மற்றும் காடுகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பிணைப்பு குறித்தும், உயிர்ச் சூழல் மண்டலம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக விளக்கி கூறப்பட்டது.

திம்பம் தலைமலை வனச்சாலையில் காடுகளை பார்வையிட்டனர். உயிர் பன்மயத்தில் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திப்பு சுல்தான் வேட்டை தடுக்கும் முகாமை மாணவர்கள் பார்வையிட்டனர். அங்கிருந்து தெங்குமரஹடா பள்ளத்தாக்கு, மோயாறு மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பாரு கழுகுகளின் வகைகள் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மூன்றாம் நாள் அரேப்பாளையத்திலிருந்து புறப்பட்டு கேர்மாளம் வனச்சரகம் சென்றடைந்தனர். அங்கு மாணவர்களுக்கு வனச்சரகத்தின் பணிகள், மோப்பநாய் சோழவின் செயல்பாடுகள், அங்கு உள்ள நாற்றங்கால் உற்பத்தி பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு உணவு சங்கிலி மற்றும் உணவு வலையின் முக்கியத்துவத்தை குறித்து சிலந்தி வலை போல மாணவர்களுக்கு நூல் கோர்த்து வலை பின்னல் வடிவில் விளையாட்டின் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கேர்மாளம் வனச்சரகத்தில் உள்ள தைலத்தோட்டம், 20 ஹெக் நிலப்பரப்பில் உள்ள புல் தோட்டத்தையும் மாணவர்கள் பார்வையிட்டனர். களைச்செடிகள் அகற்றுதலின் முக்கியத்துவம் குறித்து எடுக்க கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருமதி. டி.கீதா. பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இல.விசயேந்திரன், ஆசனூர் வனவர் குணசேகரன், வன சரகர்கள் சதீஸ், வெங்கடாசலம், கருத்தாளர் தர்மராஜ், உயிரியலாளர் தர்மராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.