ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.12.2024) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதவழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்த மதத்தினர்கள், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழக அரசால் செயல்டுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிறித்துவ தேவாலயங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் தவணைத் தொகையினையும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் ரூ.1000/-ல் இருந்து, ரூ.1200/-ஆக உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.25,000/- 10 உறுப்பினர்களுக்கும், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் 9 உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சிறுபான்மையினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் ந.சக்திவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், தனி வட்டாட்சியர் மு.இளஞ்செழியன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டனர்.