ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் இன்று (26.12.2024) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 24.12.2024 முடிய 714.14 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 98.46 அடியாகவும், 27.54 மி.கன அடிநீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 14.1 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 8.4 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 21.8 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 85.1 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6215 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 4813 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3381 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 9336 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்தபகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப்பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் (eKYC) மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெறமுடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்றுவரும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்புகொண்டு பதிவு செய்து திட்டப் பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தோட்டக்கலைத்துறை மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைபுழு, ரூகோஸ் வெள்ளை ஈ போன்ற பூச்சிகள் தாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தற்சமயம் வேர் வாடல் நோயானது ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் தென்படுவதாகவும் அதற்கு உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
கால்நடைதுறையின் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயினை தடுக்க கிராம அளவில் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கால்நடை மருத்துவர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்றைய தினம் விவசாயிகளிடமிருந்து 40 கோரிக்கை மனுக்களை பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.மீ.தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி.லோகநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், (தோட்டக்கலை துணை இயக்குநர்) திருமதி.மரகதமணி, செயலாளர்/துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) திருமதி.சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர், செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.