Type Here to Get Search Results !

கே.இ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் இன்று ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்...


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (27.12.2024) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழு தலைவர் / ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் ஒன்றிய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளில் விரைவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஈரோடு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி நகராட்சிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் கடந்த கடந்த 10.09.2024-ல் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 35 திட்டங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வட்டாரம் வாரியாக வேலை கோரி பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் பணி, மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள சாய்வு தளமானது மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அகற்றுதல், மாநகராட்சி சொந்தமான தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பவானி நகராட்சிப் பகுதியில் 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் தெருமின்விளக்குகள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் இருவழி சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி, சத்தியமங்கலம் நகராட்சியில் மின்வாரிய பணியாளர்களை நியமித்து மின்பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படாமல் செயல்படுத்துதல், மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எழுமாத்தூர், குலவிளக்கு பழமங்கலம் மற்றும் ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீட்டு இணைப்புக்கள் வழங்குதல், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குப்பட்ட பகுதியில் பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பங்கள் மாற்றியமைத்தல், பர்கூர் மலைக்கிராமங்களில் புதிதாக சமுதாயக்கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா,  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் என், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.