நடைபெறவுள்ள 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று (04.02.2025) ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் (IRTT) அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (05.02.2025) நடைபெறவுள்ளது. மேலும், பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகின்ற 08.02.2025 அன்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, இன்று (04.02.2025) ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோர் வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வைப்பறைகள், ஊடக மையம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள், வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமருமிடம், மேலும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, வட்டாட்சியர் (தேர்தல் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.