ஈரோட்டில் மார்ச் 22-ல் இந்திய ஜவுளி உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரம் வாங்குவோர் விற்போர் சந்திப்பின் 28-வது நிகழ்வு...
nammaerode24x7tamilnewsMarch 21, 2025
0
இந்திய ஜவுளி உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரம் வாங்குவோர் விற்போர் சந்திப்பின் 28-வது நிகழ்வு ஈரோட்டில் மார்ச் 22-ல் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறது.
இந்திய ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (ITAMMA - இட்டாமா) ஈரோட்டில் வரும் மார்ச் 22-ல் வாங்குவோர் விற்போர் வணிக சந்திப்பினை நடத்துகிறது. பரிமளம் மஹாலில் நடக்கும் இந்த சந்திப்பில் ஜவுளித்தொழில் துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பல்லவா குழுமத்தின் தலைவர் வி.எஸ் பழனிசாமி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். ஏ.ஜி.டி. மில்ஸ் செயல் இயக்குனரும் இந்திய செயற்கை இழை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவருமான ரமேஷ் நடராஜன் முன்னிலை வகிக்கிறார்.
இது குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமிட்டி உறுப்பினர் சுந்தர்ராஜ் பேசும் போது:-
நிகழ்ச்சிக்கான உதவிகளை, மூலப்பொருள் வழங்கும் நிறுவனமான பிர்லா செல்லுலோஸ் (Birla Cellulose), முன்னணி ஜவுளி இயந்திர உற்பத்தி நிறுவனமான கோவை சிம்டா குழும நிறுவனங்கள் (Simta Group of Companies), கட்டுமான முன் கட்டமைப்புகளை உருவாக்கும் முன்னணி நிறுவனமான செல்கான் எல்எல்பி. (Cellcon LLP), இந்திய செயற்கை இழை உற்பத்தியாளர் சங்கம் (The Indian Manmade Yarn Manufacturers Association) ஆகியவை இணைந்து, ஈரோட்டில் இந்த நிகழ்வு, மாபெரும் நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகளையும், உற்பத்தியையும் நாடு முழுவதும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. தொழில் நிறுவனங்கள் பங்கேற்று நேரடியாக பயன்பெறவும், உற்பத்தியாளர்களுடனும், புதிய பொருட்களை அறியவும், வணிக உறவை வலுப்படுத்தவும் இது ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.
ஜவுளித்துறை வரலாற்றில் தனித்துவமிக்க இடம் பிடித்துள்ள ஈரோட்டில் கைத்தறி நெசவு மற்றும் குறிப்பாக விஸ்கோஸ் நுால் உற்பத்திக்கும் பெயர் பெற்றுள்ளது. இந்தியாவின் விஸ்கோஸ் தலைநகரம் என அழைக்கப்படும் இந்த நகரில், விசைத்தறிகளிலும் பல்வேறு வகையான நுாலிழைகள் உற்பத்தியாகின்றன. ஆயத்த ஆடை தொழிற்சாலைகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன. காவேரி மற்றும் பவானி நதிக் கரைகளில் ஜவுளித்தொழில் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளன. ஜவுளித்தொழில் ஈரோடு ஒரு தனித்துவமிக்க முக்கிய இடத்தை வகிக்கும்.
இந்த நிகழ்வில் பங்கேற்க ஜவுளித்தொழில் ஈடுபட்டுள்ள 900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். புதிய வணிக பங்குதார்களை உருவாக்கவும், தரமான உதிரி பாகங்களை அறியவும், இயந்திரங்களை மேம்படுத்தவும் இந்த நிகழ்வு உதவும். மேலும், வாடிக்கையாளர்களின் தேவையை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் சொல்லும். இவை, பொருட்களின் தரத்தை உயர்த்தவும், மாற்றியமைக்கவும் உதவியாக இருக்கும். ஜவுளித்தொழிலில் தற்போதைய சந்தை நிலவரம் “இட்டாமா வாய்ஸ் வால்யும் 15” என்ற வெளியீடும் இதில் நிகழவுள்ளது. மார்ச் 22 அன்று மாலை 3.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதை வெளியிடுகிறார். இத்தொடர் வெளியீட்டில் இட்டாமாவின் நோக்கமான சிறப்பான செயல்பாடு, பசுமையை நோக்கி மற்றும் பரவட்டும் இந்தியாவின் பெயர் போன்றவை சிறப்பு அம்சங்களாக இருக்கும். இந்த நிகழ்வில் பங்கேற்க உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகள், சங்கங்கள் பங்கேற்க அழைக்கிறோம். ஜவுளி பொறியியல் துறையில் தற்போதைய மாற்றங்கள், மேம்பாடுகள் போன்றவை உங்களது வணிக நிறைவுக்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். உங்களது பங்கேற்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்வு ஒரு மிக முக்கியமானதாக அமையும் என நம்புகிறோம், என்றார்.
பேட்டியின் போது கமிட்டி உறுப்பினர்கள் அஜய் டி ஷா, J. M. பாலாஜி, சி தண்டாயுதபாணி, ர பி டி முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.