Type Here to Get Search Results !

ஈரோட்டில் அனைத்து தொழில்துறை வர்த்தக கண்காட்சி 210 அரங்குகளுடன் 2ம் தேதி தொடக்கம்...


ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் அனைத்து தொழில் துறை வர்த்தக கண்காட்சி 210 அரங்குகளுடன் வருகிற 2ம் தேதி முதல் தொடங்கி, 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.


ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் நடத்தப்படும் ‘பேட்டியா பேர்-2025’ என்ற தலைப்பில் மாபெரும் அனைத்து தொழில் துறை வர்த்தக கண்காட்சி வருகிற மே மாதம் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 5ம் தேதி வரை ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத்தில் உள்ள பரிமளம் மகாலில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது.கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கண்காட்சியின் தலைவர் ஜிப்ரி பங்கேற்று பேசினார்.



அப்போது, அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 75 சங்கங்கள் சார்பில் ‘பேட்டியா பேர்-2025’ என்ற தலைப்பில் அனைத்து தொழில் துறை வர்த்தக கண்காட்சி 4 நாட்கள் நடக்கிறது. இதில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், மத்திய மற்றும் மாநில அரசின் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள், மகளிர் அணிகலன்கள், வேளாண் பொருட்கள், இ-வாகனங்கள், உணவு திருவிழா போன்ற பல்வேறு வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கண்காட்சியின் சிறப்பம்சமாக மத்திய அரசின் M.S.M.E என்ற அமைப்பின் அங்கீகாரமும், மாநில அரசின் பேமிடிஎன் என்ற அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. M.S.M.E. அங்கீகாரத்தின் மூலம் தகுதி வாய்ந்த  M.S.M.E. சான்று பெற்ற தொழில் முனைவோர்களது அரங்குகளுக்கு 80 சதவீத மானியமும், SC, ST சார்ந்து அரங்குகள் அமைப்பவர்களுக்கும், பெண் தொழில் முனைவோர்களுக்கும் 100 சதவீத மானியமும், பயண செலவுகளும் பெற்று தரப்படுகிறது. தமிழகத்திலேயே மாநில அரசின் பேமிடிஎன் மூலம் 50 பேருக்கு மானிய அங்கீகாரம் பெற்று நடக்கும் முதல் கண்காட்சி இது தான்.


கண்காட்சியின் துவக்க விழா வருகிற 2ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு மாவட்ட கலெக்டா் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழக வீட்டு வசித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியினை தொடங்கி வைத்து, கண்காட்சி மலரை வெளியிடுகின்றனர். எம்பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், மேயர் நாகரத்தினம்,  M.S.M.E. இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, NLC முதுநிலை பொது மேலாளர் ஸ்ரீவத்சன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். உணவு திருவிழா நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு இன்னிசை கலை நிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் போன்றவை நடக்கிறது. சின்னத்திரை கலைஞர்கள் மூலம் கலை மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதேபோல் L.K.G. முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடனம், காரத்தே, குழு நடனம், சதுரங்கம், பாட்டு, சிலம்பம், சமையல், குழந்தைகளுக்கான பிற வேடிக்கை போட்டிகள் பிரிவு வாரியாக நடத்தப்பட உள்ளது. கண்காட்சியானது தினந்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 8.30 மணி வரை நடக்கிறது. கண்காட்சியில் அனைவருக்கும் அனுமதி இலவசம், என கூறினார்.

 இந்த கூட்டத்தில் கண்காட்சி செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சிவக்குமார், துணை தலைவர் செந்தில்குமார், உடனடி முன்னாள் தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.