மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம் என்ற பாராம்பரியமிக்க மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக பணியாற்றிட வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமை செயலாளர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாவட்டம் கொங்கு மண்டலத்தில் சிறப்பான இயற்கை வளம் மிக்க, காடு வளம் மிக்க, நெசவிற்கு பெயர் பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தின் மூலமாக எனது பணியினை தொடங்க உள்ளேன்.
சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனை அதற்கான தீர்வு காணும் வகையில் கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பணியினை சீரிய முறையில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. மேலும், விவசாயத்தை பெருக்குவதும், பள்ளி கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது முக்கிய பணி.
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அரசின் முன்னோடி திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்படும். சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவே மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அரசு அலுவலர்கள் சென்று பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மேலும், சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் திட்டமிட்டு முகாம்கள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்களை மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக மேற்கொள்ள உள்ளோம். மேலும், மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை திட்டமிட்டு செயல்படுவோம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையினால் மக்கள் அரசை தேடி வந்த நிலையை மாற்றி தற்போது அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு நிர்வாகம் பொதுமக்களை தேடி சென்று தீர்வு வழங்குவது என்பது நிர்வாகத்தின் படிநிலை வளர்ச்சி ஆகும். இதை மேலும் சிறப்பாக செயலாற்றிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்களின் நலனை காத்திட எத்தகைய முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து சிறப்பாக செய்திட நான் பணியாற்றுவேன். இதற்கு முன்னர் மேற்கொண்ட பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அப்பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றிடவும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசுத்துறையினர் மூலம் தொடர்ந்து முயற்சிகள் செய்வோம்.
இந்த மாவட்ட நிர்வாகத்தினை சிறப்பாக நடத்தி சென்றிட பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.