Type Here to Get Search Results !

விநாயகர் சதுர்த்தி பண்டிகை - பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக்கூட்டம்...


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (20.08.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்வதற்கும் அதன் பின்னர் நீரில் கரைக்கும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் இந்து அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது, 
"விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்வதற்கும் அதன் பின்னர் நீரில் கரைப்பதற்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலை வைப்பதற்கு திட்டமிட்டுள்ள பொறுப்பாளர் படிவம் 1-ல் சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியருக்கு கீழ்கண்டவாறு தடையின்மை சான்றுகள் / கடிதங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சிலை வைக்கப்படவுள்ள இடம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால், நில உரிமையாளரிடமும் அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும் தடையின்மைச் சான்று பெற வேண்டும். ஒலி (Sound Amplifier License) அமைப்பிற்கு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் சான்று பெற வேண்டும். சிலை வைக்கப்படவுள்ள இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக பந்தல்கள், தீ பாதுகாப்பு விதிகள் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? உகந்தவைகளா? என்பது குறித்து தீ மற்றும் மீட்பு பணிகள் அலுவலர்களிடம் சான்று பெற வேண்டும்.


தற்காலிக மின் வசதி பெறுவது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) டமிருந்து சம்மதக் கடிதம் பெற வேண்டும். சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் படிவம் 2-ல் சிலை வைப்பதற்கான அனுமதியை வழங்குவார். நிறுவப்படவுள்ள சிலைகள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பற்ற பொருட்களான, Plaster of Paris அல்லது தடைசெய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தாமல் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் தற்காலிக பந்தல்கள் ஏற்படுத்தக் கூடாது. பந்தல்களுக்குள்ளே சென்று வழிபடவும் திரும்பி வரவும் போதுமான வசதிகள் செய்யப்படவேண்டும். பொறுப்பாளர்கள் போதிய முதலுதவி உபகரணங்கள் /மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் எதையும் பந்தல்களுக்கு அருகே வைக்க கூடாது.

நிறுவப்படவுள்ள சிலைகள் மேடையிலிருந்து (Dias) 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேற்று மத வழிபாட்டுத்தலங்கள் / மருத்துவமனைகள் / கல்விக்கூடங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது. ஒலிபெருக்கிகளை உபயோகிப்பதற்கு காலையில் இரண்டு மணிநேரமும் மாலையில் இரண்டு மணிநேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரச்சாரங்கள் / பாடல்கள் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறுதல் கூடாது.


கடவுள் வழிபாடு என்ற பெயரில் மின்சாரத்தினை அனுமதியின்றி மின்கம்பத்திலிருந்து எடுக்க கூடாது. பந்தல் அமைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் மதத் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகியோரை ஆதரித்து விளம்பரத் தட்டிகள் வைக்க கூடாது. பொறுப்பாளர்கள் சிலை வைக்கப்பட்ட இடத்தில் தன்னார்வ உறுப்பினர்கள் இருவரை 24 மணிநேரமும் இருக்கும்படியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய விளக்கு வசதிகள் செய்யபட வேண்டும். மின்ஆக்கி 1 (Generator) வைக்கப்பட வேண்டும். மாற்று மதத்தினரின் மனங்களை புண்படுத்தும்படியான கோஷங்களை எழுப்ப அனுமதிக்க கூடாது.
பொது அமைதி, பாதுகாப்பு, மத நல்லிணக்கம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகியவற்றை பராமரிக்கும் நோக்கத்தில் வருவாய் துறை / காவல் துறை / மாசுக்கட்டுப்பாடு துறை அலுவலர்களால் அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். சிலை வைப்பதற்காக அமைக்கப்படும் பந்தல்களில் தீ பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மின் உபகரணங்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தீ மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட வேண்டும்.

காவல் துறை / மாசுக்கட்டுப்பாடு துறை / உள்ளாட்சி துறை ஆகியோருடன் கலந்தாலோசித்து சிலைகள் கரைக்கப்படவுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் முடிவு செய்யப்படும். முடிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும். சிலைகள் வைக்கப்பட்டுள்ள நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும். சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் பகல் 12 மணிக்கு முன்னதாகவே துவங்கப்பட வேண்டும். காவல் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே ஒழுங்கான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும். சிலைகளை எடுத்துச் செல்ல மினி லாரி / டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாட்டு வண்டிகள் / மூன்று சக்கர வாகனங்களை அனுமதிக்க கூடாது. விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் வாகனங்களில் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் மட்டுமே ஆட்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்கள் /கரைக்கப்படவுள்ள இடங்கள் / ஊர்வலம் செல்லும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க கூடாது.


வழிபாட்டுப் பொருட்களான மலர்கள், துணிகள், அலங்காரப் பொருட்கள்(பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆன) ஆகியவற்றினை சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன் அகற்றப்பட வேண்டும். சிலைகள் கரைக்கப்படவுள்ள இடங்களில் போதிய தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலினை கட்டுப்படுத்த வேண்டும். சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் கரைக்கப்படாமல் விடுபட்டுள்ள பொருட்களை சேகரித்து உரிய வகையில் அழிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு துறையினர் சிலைகள் கரைக்கப்படும் நீர் நிலைகளை, கரைக்கப்படுவதற்கு முன் / கரைக்கப்படும் பொழுது / கரைக்கப்பட்ட பின் ஆகிய மூன்று கட்டங்களாக நீரின் தன்மை குறித்து தர ஆய்வு செய்ய வேண்டும். சிலைகள் நிறுவப்படுவதற்கான அனுமதி வழங்குவது குறித்து மேல்முறையீடுகள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்". என தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அ.சுஜாதா, கோபிச்செட்டிபாளையம் சார் ஆட்சியர் எஸ்.சிவானந்தம், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி, விவேகானந்தன், தங்கவேல், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி. சிந்துஜா, காவல்துறையினர், வட்டாட்சியர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.