Type Here to Get Search Results !

கல்வி ஒன்றே நம் வாழ்வில் நமக்கான நல்வழியை வகுத்து தரக்கூடியது - மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் அறிவுரை...


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.8.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் 'நான் முதல்வன் உயர்வுக்குபடி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது,
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மாணவியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும் அவர்கள் வாழ்வில் உயர்நிலையை அடைந்திட கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கல்வி துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிடும் வகையில் நான் முதல்வன் உயர்வுக்குபடி உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றார்கள்.

அதன்படி, இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 'நான் முதல்வன் -உயர்வுக்குபடி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பள்ளி பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் 12 வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லாதவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கிடவும். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களை உயர்கல்வியில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தியாவிலேயே 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோர்களின் சதவிகிதம் தமிழ்நாட்டில் தான் அதிகம். அதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். அறிஞர் அண்ணா மற்றும் காமராசர் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் முயற்சி தான். அவர்களின் முயற்சியினால் தான் உயர்கல்வியில் நாம் உயர்நிலை அடைந்துள்ளோம். கல்வி கற்க மாணவ, மாணவியர்கள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருத கூடாது. கல்வி ஒன்றே நம் வாழ்வில் நமக்கான நல்வழியை வகுத்து தரக்கூடியது. எந்தவொரு நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வியை ஊக்குவித்திட புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் பயன்படுத்தி கொண்டு உயர்கல்வி பயில முன்வர வேண்டும். இன்றைய தினம் சேர்ந்த கலை அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. நர்சிங், பாராமெடிக்கல், பொறியியல் உள்ளிட்ட 42 கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வருகை புரிந்து தங்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கி உயர்கல்வியில் தங்களுக்கான துறை தேர்வு செய்திட வழிகாட்ட உள்ளார்கள். மேலும், உடனடி சேர்க்கையும் நடைபெற உள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4 'நான் முதல்வன் -உயர்வுக்குபடி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, இன்று (22.8.2025) மற்றும் 2.9.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 26.8.2025 மற்றும் 8.9.2025 ஆகிய நாட்களில் கோபிசெட்டிபாளையம் சி.கே.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்கள் உயர்கல்வியில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் இம்முகாம்களை பயன்படுத்தி கொண்டு உயர்கல்வியில் சேர்ந்திட முன்வர வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி கொண்டு நன்கு கல்வி கற்று உயர் பதவிகள் வகித்திட வேண்டும்", என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 'நான் முதல்வன் உயர்வுக்குபடி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 89 மாணவ, மாணவியர்கள், 26 பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த உயர்கல்வி சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட படிப்புகளில் 24 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 மாணவ, மாணவியர்களுக்கு பாரா மெடிக்கல் கலந்தாய்வில் தேர்வு செய்ய வேண்டிய கல்லூரி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சிந்துஜா, முதன்மை கல்வி அலுவலர்  கோ.சுப்பாராவ், உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருமதி. ரா.ராதிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி.லோகநாதன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் சி.ஏ.ஆனந்தகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி எஸ்.சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.நூர்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி சாந்தி, முன்னோடி வங்கி மேலாளர் எம்.விவேகானந்த் உட்பட பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.