ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (04.10.2025) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் சுமார் 100 இடங்களில் காவல்துறையில் ஒரு நபர் மற்றும் அரசு அலுவலர் ஒரு நபர் அடங்கிய குழு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் குறைந்தபட்சம் 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு 2410 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 697 நபர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும், 2025-ம் 25.09.2025 வரை 1784 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.
இதில் 418 நபர்கள் மரணமடைந்துள்ளனர். எனவே, விபத்தில்லா ஈரோடு என்ற நிலையை ஈட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் தலைக்கவசம் (Helmet) அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்னிமலை, பேருந்து நிலையம் அருகில் தலைக்கவசம் (Helmet) அணிவது கட்டாயம் "ஹெல்மெட் அணிவது சட்டம் மட்டுமல்ல, உயிரைக் காப்பதற்கான பொறுப்பும் ஆகும்" என்பதை உணர்ந்து பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தலைக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு சாக்லெட் வழங்கியும், தலைக்கவசம் அணியாத நபர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும் கடந்த மற்றும் நடப்பாண்டில் நடைபெற்ற விபத்து குறித்தும் எடுத்துரைத்து அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், துணை காவல் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம், காவல் ஆய்வாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், தங்கமணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.