ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று (04.10.2025) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமினை பார்வையிட்டு, 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினால் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 9-வது மருத்துவ முகாமினை மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (04.10.2025) துவக்கி வைத்து 10 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களும், 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினையும் என 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்மருத்துவ முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க வருகிறார்கள், இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ரத்தப்பரிசோதனை, ECG, X-RAY பரிசோதனைகளும் கூடுதலாக பெண்களுக்கு கர்பப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்குவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து ECHO போன்ற உயர் பரிசோதனைகளும் செய்யப்படும். உயர் சிகிச்சை தேவைப்படுவோர் பரிந்துரை செய்யப்படுவார்கள். மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான அட்டையும் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களில் 12546 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. 6880 நபர்களுக்கு ECG-ம், 8414 நபர்களுக்கு ஆய்வக பரிசோதனையும், 704 நபர்களுக்கு X-RAYம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 308 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் 431 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. சாந்த குமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பு. அருணா, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ரவிக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
