Type Here to Get Search Results !

கத்திரிமலை கிராமத்திற்கு முதன் முறையாக மின்சாரம் கொண்டு செல்லும் பணி - அமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.


ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட கத்திரிமலை கிராமத்திற்கு முதன் முறையாக மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் விஸ்தரிப்பு பணிகளை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று (06.10.2025) துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். படித்த இளைஞர்களுக்காக தொழிற்சாலைகளை பெருக்கி பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்கள். பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் என ஒவ்வொருவரும் பயன் பெறும் வகையில் இத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.



மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகப்பெரிய அளவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும், நூலகம் அமைப்பதற்கும், எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயில பயிற்சி மையம் அமைப்பதற்கும், தோனி மடுவு பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளார்கள்.


மேலும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், நூலகம் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கத்தரிமலைக்கும் மின்சாரம் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.


அதன்படி, இன்றைய தினம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் கத்தரிமலைக்கு மின்சாரம் வழங்கும் இந்த சிறப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 8.34 கி.மீட்டர் தொலைவிற்கு உயர் அழுத்த மின்பாதை 50 sq mm புதைவிட கம்பியின் மூலமாக விஸ்தரிப்பு பணிகள் செய்து ஒரு 100 KVA மின்மாற்றி அமைப்பு கத்தரிமலையில் உள்ள 75 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்பாதையானது மேட்டூர் - சத்யா நகர் 33/11 KV துணை மின் நிலையத்தின் உள்ள காவேரிபுரம் 11 KV மின்பாதை வழியாக மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. மேலும் 271 மின் கம்பங்கள் அமைத்து கத்தரிமலை கிராமத்திற்கு புதிதாக முதன்முறையாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. கத்தரிமலை கிராமம் ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. 


கத்தரிமலை கிராமத்தில் 76 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் 30 மாணவர்கள் படிக்கின்ற ஒரு நடுநிலை பள்ளியும் ஒரு கோவிலும் உள்ளடக்கிய கிராமம் ஆகும். இந்த கிராமம் சென்னம்பட்டி வனப்பகுதி எல்லைக்குள் 3600 அடி உயரத்தில் அமைத்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது மின்சாரம் வசதி வழங்கப்படுவதன் மூலம் இப்பகுதி மக்கள் பெரும் அளவில் பயன்பெறுவர் என தெரிவித்தார்.
மேலும், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இவ்விழாவில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான நபர்களுக்கு ரூ.5,000/- ஊக்கத்தொகைக்கான காசோலையினையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்),   வி. சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), மின்சார வாரியம் தலைமைப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், கண்காணிப்பு பொறியாளர்கள் சின்னுசாமி, தாரணி, செயற்பொறியாளர்  ராமசந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.