Type Here to Get Search Results !

40 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகள் - கலெக்டர் வழங்கினார்...


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியியல் கல்லுாரியில் இன்று (24.10.2025) கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி அவர்கள் 40 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு ஆகவே எந்த தயக்கமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கல்வி கடன் பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல், மற்றும் கல்வி கடன் முகாம் நடத்துவது மூலம் இந்த ஆண்டு இலக்கு எட்ட வேண்டும். இந்த ஆண்டு 3000 மாணவர்களுக்கு ரூ.100.00 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கும், ஏற்கனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி தொடர்வதற்கும், கல்விக்கடன்களை எளிதில் பெறுவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றவர்களுக்கும் கல்விக்கடன் பெறும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து உதவிட வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் (16.09.2025 முதல் 24.10.2025 வரை) 208 மாணவர்களுக்கு ரூ.14.94 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்திருந்த 40 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகளை வழங்கினார்.


மேலும், இக்கல்விக்கடன் முகாமில், மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் கல்விக்கடன் குறித்த கருத்துக்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கல்விக்கடன் விண்ணப்பிக்கும் முறை, கல்விக்கடன் தொடர்பான பல்வேறு கையோடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 500-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த், கோபி கலை மற்றும் அறிவியியல் கல்லுாரி முதல்வர் வேணுகோபால், கனரா வங்கி கிளை மேலாளர் (கோபிசெட்டிபாளையம்)  பாலாஜி வெங்கடேஷ்வரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.