ஈரோடு, சித்தோடு, டெக்ஸ்வேலி வணிக வளாகத்தில், புதியதாக பூம்புகார் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (16.10.2025) துவக்கி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கைவினைப் பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும். தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தொன்மையான கலைகளை பாதுக்கப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை நிலையங்களையும், செம்மையாக கைவினைப்பொருட்கள் தயாரிப்பு நிலையங்களையும் நடத்தி வருகிறது. மேலும், டெல்லி, கொல்கத்தா, குஜராத் போன்ற பிற மாநிலங்களிலும் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் கிளையான பூம்புகார் விற்பனை நிலையம், ஈரோடு மேட்டூர் ரோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இவ்விற்பனை நிலையத்திற்கு ஈரோடு சுற்று வட்டராம், திருப்பூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து தங்களது இல்லங்களுக்கு அழகூட்டவும் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு பரிசளிக்கவும் கைவினை பொருட்களை வாங்கி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள். வங்கிகள் கைவினை பொருட்களை வாங்கி பயனடைகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இக்கைவினை பொருட்களை சந்தைப்படுத்துவத்தின் மூலம் அதனை உருவாக்கும் கைவினைகளின் வாழ்வாதாரமும் உயர்வடைகிறது.
அதன் தொடர்ச்சியாக, பூம்புகார் விற்பனை நிறுவனம், ஈரோடு சித்தோடு, டெக்ஸ்வேலி வணிகவளாகத்தில் கடை எண் 1114-ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று துவக்கி வைத்து, முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இவ்விற்பனை நிலையத்தில் நாச்சியார்கோயில் குத்து விளக்கு, சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள், அரும்பாவூர் மரச்சிற்பங்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், மைலாடி கற்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியம் போன்ற புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களும், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலுருந்து வரவைக்கப்பட்ட அழகிய வேலைபாடு கொண்ட கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கைவினை பொருட்களை ஈரோடு மற்றும் இதர பகுதியிலுள்ள பொதுமக்கள், நிறுவனங்கள் வாங்கி பயன்பெறவும் மற்றும் கைவினை பொருட்களை உருவாக்கும் கைவினைக்கலைஞர்களும் பயன்பெறும் வகையில் இருக்கும்.
இந்நிகழ்வின்போது, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சேவியர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.