Type Here to Get Search Results !

சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி துவக்கம்...

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி வாரச்சந்தை அருகில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று (26.10.2025) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கான அனைத்து தேவைகளையும் உடனடியாக செய்து கொடுத்து வருகிறார்கள். மேலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இளைஞர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் விளையாட்டரங்கங்கள் அமைப்பது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டில் சிறந்து விளங்க பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அனைவரும் ஏதேனும் விளையாட்டில் கலந்து கொள்வதன் மூலம் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதுடன்  மனமும் வலுவடைகிறது. அந்த வகையில் இளைஞர்கள் மட்டுமில்லாமல் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் விளையாட்டில் தங்கள் திறமையை காண்பிக்க ஏதுவாக முதலமைச்சரின் விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்கள் கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் (05.05.2025) அன்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் 26.10.2025 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி வாரச்சந்தை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் அமையவுள்ள இந்த முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான வசதிகள் உள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத்துறையில் மேலும் சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பாக அமையும். விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் அமையும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு),  சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி ),  சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.