ஈரோடு மாவட்டம் ஹோட்டல் டர்மரிக்கில் இன்று (24.10.2025) தென்னிந்திய தொழில் வர்த்தக சபை (SICCI) மற்றும் பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) சார்பாக தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் கருத்தரங்கம் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் எல். நிர்மல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் நோக்கமானது இந்த மண்டலத்தை சார்ந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கியுள்ள தொழில் முனைவோர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான வழிமுறைகள், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறை வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்து ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதாகும்.
ஈரோடு மாவட்டமானது விவசாயம், உணவு மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாகும். இங்கு ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பதாயிரமத்துக்கும் மேலான உதயம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றில் இரண்டாயிரத்து எண்ணூற்றுக்கும் மேலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உணவு சார்ந்த உற்பத்தி நிறுவனங்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு சார்ந்த சேவை நிறுவனங்களும் இயங்குகிறது.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் அவர்கள் தனது உரையில், இங்குள்ள உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்கள் ஏற்றுமதி செய்வதற்கு உண்டான வழிமுறைகைளை தெரிந்து கொண்டு அடுத்த மாதம் ஈரோட்டில் நடக்கவுள்ள வாங்குவோர் (வெளிநாட்டு நிறுவனங்கள் ) - விற்போர் (இப்பகுதி நிறுவனங்கள்) சந்திப்பை பயன்படுத்தி ஏற்றுமதியாளராக மாற வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்க நீட்ஸ் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், PMEGP, PMFME ஆகிய திட்டங்களையும், தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருப்போர் தொழில்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021 பயன்படுத்தி மேம்படுத்தலாம். இம்மாவட்டத்தில் தொழில் துவங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் உணவு சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ஈரோடு மாவட்டத்தில் பொன்மஞ்சள் குறுந்தொழில் குழுமம், உணவு பூங்கா, சேமிப்புக் கிடங்குகள், உணவு பதப்படுத்தும் மட்டும் குளிரூட்டும் நிலையம், விவசாயம் சார்ந்த தொழில் துவங்க சிட்கோவில் சிறப்பு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்கள்.
இக்கருத்தரங்கில் 35 அரங்குகளில் 40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். அவற்றை பார்வையிட்டு அவர்களுக்கு தொழிலை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது உரையில், ஈரோடு மாவட்டத்திற்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு வங்கி கடன் இலக்கு ரூ. பத்தாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்தொரு கோடி ஆகும். இவற்றில் முதல் காலாண்டில் நமது மாவட்டத்தில் உள்ள வங்கிகள் நாலாயிரத்து எழுநூற்று நாற்பத்தி ஐந்து கோடி ரூபாய் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளன. இது இந்த ஆண்டு கடன் இலக்கில் 45 சதவிகிதம் ஆகும். இங்குள்ள உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்கள் ஏற்றுமதி செய்வதற்கு உண்டான வழிமுறைகைளை APEDA, Guidance Tamilnadu, SICCI, MSME துறை மூலம் தெரிந்து கொண்டு ஏற்றுமதியாளராக மாற வேண்டும் எனத் தெரிவித்தார்
இக்கருத்தரங்கில் SICCI ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல மேலாளர், Guidance தமிழ்நாடு மற்றும் தபால் துறை உயர் அலுவலர்கள், இயக்குனர் - இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் பேக்கேஜிங் ஆகியோர் கலந்து கொண்டு ஏற்றுமதிக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். மேலும், இக்கருத்தரங்கில் ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சார்ந்த தொழிற்கூட்டமைப்பினர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தார்கள். நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர், கனரா வங்கியின் உதவி பொது மேலாளர், அரசு அலுவலர்கள், 250க்கும் மேற்பட்ட உணவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpg)
.jpg)
