Type Here to Get Search Results !

பொல்லான் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் - 17.11.2025 இன்று பணியினை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் .



ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரம், வடுகப்பட்டி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,



சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்கள் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே மற்போர், வாள்வீச்சு மற்றும் வில் பயிற்சிகளில் சிறந்து விளங்கினார். இவரது வீரத்தையும் திறமையையும் கண்ட தீரன் சின்னமலை, இவரைத் தனது படையில் சேர்த்துக் கொண்டார். பொல்லான் தனது திறமையால் தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியாகவும், மெய்க்காப்பாளராகவும் உயர்ந்தார். இவர் ஆங்கிலேய இராணுவத்திடம் இருந்து இரகசியங்களைத் திரட்டி சின்னமலையிடம் தெரிவிக்கும் ஒற்றர் படைப் பிரிவிலும் முக்கியப் பங்கு வகித்ததுடன் பல போர்களிலும் தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். மாவீரன் பொல்லான் அவர்கள் ஆங்கிலப் படைகள் தோல்விக்கு காரணமாக விளங்கியதால், பொல்லானை கைது செய்து ஓடாநிலைக் கோட்டை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் ஆங்கிலேயர்கள் படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டு வீரமரணம் அடைந்தார்.


சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் வீரத்தினை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில்‌ அன்னாருக்கு முழுதிருவுருச்‌ சிலையுடன்‌ கூடிய அரங்கமானது மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, ஜெயராமபுரம் கிராமத்தில் 83 சென்ட் நிலப்பரப்பில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு தற்போது பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. இந்த அரங்கமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.11.2025 அன்று திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 11,240 சதுர அடி கட்டிட பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. திருவுருவச்சிலை, அரங்கத்தின் முன்பகுதியில் நிறுவப்படவுள்ளது. மேலும், 300 நபர்கள் அமர்ந்து சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையிலும், 150 நபர்கள் உட்கார்ந்து உணவு அருந்தும் வகையிலும், மின்தூக்கி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறை பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்கள் போரில் பயன்படுத்திய கருவிகளை காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் அரச்சலூர், ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் குதிரையின் மேல் அமர்ந்தபடி வெண்கலச்சிலை அமைக்கபடவுள்ள பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி,  மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர். ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  வி.சி.சந்திரகுமார், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர்  மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் ரங்கநாதன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.