ஈரோடு, வேப்பம்பாளையம், முத்து மஹாலில், “வாங்குவோர் – விற்போர் சந்திப்பின்“ இரண்டாம் நாள் நிகழ்வு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ் அவர்கள் தலைமையில் இன்று (15.11.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் FaMe TN அமைப்பு மூலம் ஈரோட்டில் நேற்று 14.11.2025 மற்றும் இன்று 15.11.2025 ஆகிய இரண்டு நாட்களாக MSME நிறுவனங்களுக்கான “வாங்குவோர் –விற்போர் சந்திப்பு” (Reverse Buyer–Seller Meet) நடத்தப்பட்டது. அதன்படி இன்று இரண்டாம் நாள் நிகழ்வில் ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், மேலும் 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சார்ந்த 42 நிறுவனங்களும் பங்கேற்றன. இதற்கு முன்பு இச்சந்திப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக இரண்டாம் நிலை நகரமான ஈரோடு தேர்வு செய்யப்பட்டு வெற்றிகரமாக இந்நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.
மேலும் இச்சந்திப்பில் ஜவுளி, விவசாயம், உணவு உற்பத்தி, கயிறு தயாரிப்பு, தோல் பொருட்கள் போன்ற துறைகளில் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிகழ்வின் இறுதி நாளான இன்று, 83 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் ரூ.54.94 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ஆர்டர்களைப் பெற்று, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநர் எல். நிர்மல் ராஜ் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்வில், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், ஈடிசியா, ஃபாட்டியா தொழிற்கூட்டமைப்புகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)
