Type Here to Get Search Results !

70 வயது பூர்த்தியடைந்த 25 மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்து சீர்வரிசை - அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.


ஈரோடு மாநகராட்சி, கோட்டை, அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில், இன்று (16.11.2025) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட 25 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்து சீர்வரிசை பொருட்களை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அனைத்து தரப்பினருக்கும் எல்லா திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், ஈரோடு இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களின் சார்பில் 70 வயது பூர்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள 25 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்கின்ற நிகழ்வு, மிக எழுச்சியாக நடைபெறும் திருமணம் எவ்வாறு நிகழுமோ அந்த அளவிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரையும் மதிக்க வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் "அன்புச்சோலை" திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் முதியோர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டு அவர்களின் தனிமையை போக்குகின்ற வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயிலில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.



தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் 25 மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சட்டை, புடவை, 2 மாலைகள், வெற்றிலை, பாக்கு, 1 முழம் பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழவகைகள், எவர் சில்வர் தட்டு, 1 டசன் கண்ணாடி வளையல், பாக்கெட் சைஸ் சுவாமி படம் உள்ளிட்ட பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கி சிறப்பு செய்தார்.



இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், அறங்காவலர் குழுத் தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.