ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 06.12.2025 அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று (18.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 06.12.2025 அன்று ஈரோடு மாவட்டம் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் சுமார் 30 க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்கின்றனர்.
இம்முகாமினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் அவர்கள் தலைமையேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ராதிகா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சாந்தி மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)