ஈரோடு மாவட்டம், பெருந்துறை, தோப்புப்பாளையம் கொங்கு பொறியியல் கல்லூரியில், இன்று (17.11.2025), கூட்டுறவுத்துறையின் சார்பில், ‘தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவு நிறுவனங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 3520 பயனாளிகளுக்கு ரூ.44.02 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, இன்றைய தினம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ‘தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவு நிறுவனங்கள்” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் தொழில்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுத்து செல்வதற்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2024-25 ஆம் ஆண்டில் 82,869 விவசாயிகளுக்கு ரூ.1126.16 கோடி மதிப்பீட்டிலான பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோரின் திறனை ஊக்குவித்து அவர்களின் பொருளாதாரம் தன்னிறைவு பெற 2024-2025ஆம் ஆண்டில் 277 மகளிருக்கு 1.27 கடன் வழங்கப்பட்டுள்ளது. 493 நபர்களுக்கு ரூ43.46 கோடி வீட்டுவசதிக்கடன் மற்றும் அடமானக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் தலைமையகம் மற்றும் 35 கிளைகளும் மைய வங்கியியல் சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டு அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 6 ஏ.டி.எம், 1 மொபைல் ஏ.டி.எம் மற்றும் 30 கிளைகளில் மைக்ரோ ஏடிஎம் வசதியானது வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மண்டலத்தில் 177 கூட்டுறவு நிறுவனங்களில் பொது சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு அரசுத்துறை சேவைகளான பட்டா, சிட்டா, பிறப்பு சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், வருமானவரி சான்றிதழ்கள், சமூகநலத்துறை சேவைகள் ஆகியவை மின் ஆளுமை வழி இருப்பிடத்திலேயே பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி பெறத் தகுதியுள்ள 7.64 இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் 12 கிலோ முதல் 35 கிலோ வரை விலையில்லா அரிசி வழங்கும் மாபெரும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 904 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 337 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் ஆக மொத்தம் 1241 நியாயவிலைக்கடைகள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் கூட்டுறவுத் துறையின் மூலம் செம்மையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பொது மக்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பல்வேறு வகைப்பட்ட சேவைகள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மகளிர் சுய உதவிக்குழுக்கடன், மத்தியக் காலக் கடன், பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி என மொத்தம் 3520 பயனாளிகளுக்கு ரூ.44.02 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறையில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதித்துறை கூட்டுறவு சங்கங்கள், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கும், பணியாளர்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை பார்வையிட்டார்.
இவ்விழாவின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), துணை மேயர் வே.செல்வராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் க.வே.சு.குமார், இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் (மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை) த.செல்வக்குமரன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பா.ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் ஜி.காலிதா பானு, கூட்டுறவு சார்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் மு.பா.பாலாஜி உட்பட கூட்டுறவு சங்கங்களின் துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)