Type Here to Get Search Results !

பொல்லான் அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் - பணியினை பார்வையிட்ட அமைச்சர்கள்...




ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரம், வடுகப்பட்டி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (18.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



இந்நிகழ்வில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தெரிவித்ததாவது,




ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்கள். அதன்படி, அன்னாருக்கு சிறப்பு சேர்க்கின்ற  வகையில், அரச்சலூர் ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சென்னை, கிண்டியில் இருப்பது போல் குதிரையின் மேல் அமர்ந்திருக்கு வெண்கலச்சிலை அமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.11.2025 அன்று அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கவுள்ளார்கள். மேலும் தீரன் சின்னமலை அவர்களின் படைத்த படைத்தளபதியாகவும், மெய்க்காப்பாளராகவும் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போர்களில் போரிட்டு வெற்றி பெற்றவர். ஓடாநிலைக் கோட்டை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் ஆங்கிலேயர்கள் படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டு வீரமரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் வீரத்தினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்‌ அன்னாருக்கு முழுதிருவுருச்‌ சிலையுடன்‌ கூடிய அரங்கமானது மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.11.2025 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 



மேலும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய சங்கத்தின் தலைவராக அயராது உழைத்து தமிழ்நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்டவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பால்வளத்தந்தை ஐயா எஸ்.கே.பரமசிவன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.12.2024 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பால்வளத்தந்தை ஐயா எஸ்.கே.பரமசிவன் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் கிராமம், பால் பண்ணை (ஆவின்) வளாகத்தில் உள்ள பூங்காவில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு இன்றைய தினம் இந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.




இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் ரங்கநாதன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.