தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையால் செயல்படுத்தப்படவுள்ள உழவர் அலுவலர் தொடர் திட்டம் (யு ஏ டி டி 2.0)-இல் தோட்டக்கலைத் துறையின் களப் பணியாளர்கள் இணைக்கப்பட்டதைக் கைவிட வலியுறுத்தி, இன்று (20.11.2025) ஈரோடு காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை கொண்டு வந்துள்ள யூ ஏ டி டி2.0 திட்டமானது, தோட்டக்கலைப் பயிர்களின் தனித்துவமான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது முழுக்க முழுக்கத் தானிய மற்றும் மானாவாரிப் பயிர்களை மட்டுமே மையமாகக் கொண்டது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். உழவர்களுக்கு உயர் தொழில்நுட்பங்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, உழவர்களைப் பாதிக்கக்கூடிய இந்தக் களப்பணியாளர்கள் இணைப்பினை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் சாந்தி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் பவானி கார்த்திக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், தோட்டக்கலை உதவி அலுவலர் மற்றும் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
%20(1).jpg)