ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் இன்று (11.12.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 16-வது மதிப்பீட்டு குழு இன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதிப்பீட்டுக் குழு என்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாகும், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளின் செலவு மற்றும் நிதிப் பயன்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை இக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட தொகை சரியான முறையில் செலவிடப்படுகிறதா, குறித்த நேரத்தில் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறதா, சரியான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு முடிக்கப்படவில்லை என்றால் எதனால் தாமதம் ஆகிறது ஆகியவற்றை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பிலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது இக்குழுவின் பணியாகும்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், ஈரோடு, சோலார் பேருந்து நிலையத்தில் ரூ.74.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆய்வு செய்யப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஓய்வு அறையில் படுக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது. காலை ஆய்வின்போது மதிப்பீட்டுக்குழுவின் சார்பில் படுக்கை வசதிகள் அமைத்தால் அவர்களுக்கு ஓய்வு எடுத்து பின் மீண்டும் வாகனத்தை இயக்க வசதியாக இருக்கும் என்று யோசனையை எடுத்துக் கூறினோம். இன்றைய தினமே ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு படுக்கை வசதிகள் ஏற்படுத்தியதற்கான புகைப்படங்களையும் காண்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அவல் பூந்துறை பகுதியில் சாலை பணி ஆய்வு செய்யப்பட்டது. சென்னிமலை முருகன் கோயிலில் மலைப்பாதை தார்சாலை சீரமைக்கும் பணி மற்றும் பெருந்துறை கொப்பரை தேங்காய் ஏல மையத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு விவசாயிகள் அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று கூறினர். மேலும் சிறு கோரிக்கைகள் வைத்தனர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பிற மாநகராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதில் ஈரோடு மாவட்டம் முன் உதாரணமான மாவட்டமாக திகழ்கிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மிக விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், மேலும் அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, இயற்கை வளங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தாட்கோ சார்பில் சி.எம் அரைஸ் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மளிகை கடை, ஆட்டோ வாங்குதல், கனரக வாகனம் வாங்குதல், கார்மென்ட்ஸ் போன்ற சுயதொழில் தொடங்க ரூ.66.46 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690/- வீதம் ரூ.26,760/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.46,49,487/- மதிப்பீட்டில் கடனுதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.12,42,500/- மதிப்பீட்டில் கடனுதவிகளும் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.1,25,64,747/- (ரூ.1.26 கோடி) மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் இராம.கருமாணிக்கம் (திருவாடானை), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்) எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி) சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன், துணைச் செயலாளர் சு.பாலகிருஷ்ணன், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் மாவட்ட வன அலுவலர் (ஈரோடு) குமிலி வெங்கட அப்பால நாயுடு, துணை இயக்குநர் (சத்தியமங்கலம் கோட்டம்) யோகேஷ் குமார் கர்க், துணை இயக்குநர் (ஹாசனூர் கோட்டம்) குலால் யோகேஷ் விலாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.காஞ்சன் சௌதரி திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிரியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)