Type Here to Get Search Results !

எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு...


ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன் அவர்கள் தலைமையில், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் இன்று (11.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.




இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஈரோடு, சோலார் பகுதியில் ரூ.74.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், பொதுமக்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வசதிகள், ஓய்வெடுக்கும் அறைகள், கழிவறை வசதிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பேருந்து நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினர்.




தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் ஈரோடு - தாராபுரம் சாலையில் கி.மி.14/4 முதல் 15/8 வரை ஓடுதளம் மேம்பாடு செய்யப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் மற்றும் தடிமன் குறித்தும், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.90 கி.மீட்டர் மலைப்பாதை தார்சாலை சீரமைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்பணியானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.10.2025 அன்று காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் வளாகத்தில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு திருக்கோயில் நிதியின் மூலம் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தற்போது 60 % முடிக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. 




தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் பெருந்துறையில் செயல்படும் கொப்பரை தேங்காய் ஏல விற்பனை மையம் மற்றும் பசுமை சமையல் எண்ணெய் ஆலையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆலையின் செயல்பாடுகள், தயாரிக்கப்பட்டு வரும் சமையல் எண்ணெய் பொருட்கள், உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். இந்த மையத்தில் ஏலமானது வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களிலும், சமையல் எண்ணெய் விற்பனை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.




தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில், 1 நபருக்கு ரூ.50,000/- மாற்றுத்திறனாளி கடன், 14 நபர்களுக்கு ரூ.21,21,000/- மதிப்பீட்டிலான பயிர்கடன், 1 நபருக்கு ரூ.22,50,000 மதிப்பீட்டிலான மகளிர் சுய உதவிக்குழு கடன், 2 நபர்களுக்கு ரூ.20,00,000 மதிப்பீட்டிலான வீட்டு அடமான கடன், 2 நபர்களுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலான சிறு வணிக கடன் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு ரூ.30,000/- மானியத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள், 2 பயனாளிகளுக்கு ரூ.2,12,664/- மானியத்தில் பவர் டில்லர்கள், 1 பயனாளிக்கு நிழல் வலை கூடாரம் அமைக்க ரூ.1,77,500/- மானியம், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.4,13,463/- மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க பணியானை, 1 நபருக்கு ரூ.6,000/- மதிப்பிலான சோளம் விதை தொகுப்பு, 1 நபருக்கு ரூ.6,000/- மதிப்பிலான கம்பு விதை தொகுப்பு, 1 நபருக்கு ரூ.8,000/- மதிப்பிலான எள் விதை தொகுப்பு 3 நபர்களுக்கு உழவர் அடையாள அட்டை என மொத்தம் 35  பயனாளிகளுக்கு ரூ.73,74,627/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 




அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வுகளின்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்  / சட்டமன்ற உறுப்பினர்  இராம. கருமாணிக்கம் (திருவாடானை), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர். கி. சீனிவாசன், துணைச் செயலாளர் சு. பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப. கந்தராஜா, துணை ஆணையர்கள் (இந்து சமய அறநிலையத்துறை) சுகுமார், நந்தகுமார், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ் கண்ணா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.