தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டங்களில் கணிசமான அளவில் யானைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
ஈரோடு மாவட்டம், ஈரோடு வனக்கோட்டம், அந்தியூர் வனச்சரகம், பர்கூர் மலைப்பகுதியில் ஒந்தனை வனக்காவல் சுற்றுக்குட்பட்ட கடைஈரெட்டி பழங்குடியின கிராமத்தை சார்ந்த ரமேஷ் த/பெ வைரன் என்பவர் வருவாய் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வரும் இடத்தில் 04.12.2025 அன்று யானை ஒன்று வேலி அருகே இறந்து கிடப்பதை அறிந்த வனத்துறைப்பணியாளர்கள், அந்தியூர் வனச்சரக அலுவலர் தலைமையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களவிசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த யானை மின்சாரத் தாக்குதல் காரணமாக என தெரியவந்துள்ளது. இக்குற்ற சம்பவம் குறித்து வனஉயிரின வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் யானையின் இறப்பிற்கான உண்மையான காரணம், இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure ) பின்பற்றி பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கை பெற்ற பின்னரே உறுதி செய்ய இயலும்.
யானை இறந்த நிகழ்வானது வடபர்கூர் காப்புக்காட்டிலிருந்து சுமார் 980 மீட்டர் தொலைவில் வருவாய் புறம்போக்கு நிலத்தில் நடைபெற்றுள்ளது. மேற்படி வருவாய் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியினை ஈரோடு வனக்கோட்ட வனத்துறைப்பணியாளர்கள் கடந்த 23.11.2025 அன்று ஆய்வு மேற்கொண்டதில், அப்போது 12V நேரடி மின்னோட்டத்தில் (DC Current) செயல்படும் மின்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி செயல்பட்டு வந்துள்ளது. அந்த இடம் மட்டுமில்லாமல், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்வேலிகளை களப்பணியாளர்கள் அடிக்கடி களத்தணிக்கை மேற்கொண்டு உரிய தணிக்கை விவரங்களை அவ்வப்போது பதிவு செய்தும் அறிக்கையாகவும் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், தற்போது யானை இறந்த இடத்தில் மின்வேலி அமைத்தவரின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை ஆய்வு செய்து, தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவுசெய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) விதிகள், 2023-யில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி அமைக்கப்படாததை சுட்டிக்காட்டி ரமேஷ் த/பெ வைரன் என்பவருக்கு ஏற்கனவே அறிவிப்பும் (Notice) வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி யானை இறப்பதனை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவுசெய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) விதிகள், 2023-யினை முறையாக செயல்படுத்திடவும் களப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு குழுவினர் தொடர்ந்து வனத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மின்வேலிகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதற்குரிய உபகரணங்களை கொண்டு உயர் அழுத்த மின்சாரம் செல்லுவதை கண்டறிய தீவிர கள ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு வனக்கோட்டத்தில் தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவுசெய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) விதிகள், 2023-யின்படி மின்வேலிகள் அமைக்க 645 விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு 49 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில விவசாயிகளின் விதிமீறல் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
இதுபோன்ற அசம்பாவிதகள் நிகழாவண்ணம், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) விதிகள், 2023-யின்படி மின்வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்கவும் ஆபத்து நேரங்களில் தானாகவே மின்னிணைப்பு துண்டிக்கும் அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். இதுபோன்று யானை போன்ற பிற வனஉயிரினங்கள் மின்சாரம் தாக்கி இறக்கும் நிகழ்வுகளில், அதற்கு காரணமானவர்கள் மீது வனஉயிரினம் (பாதுகாப்பு) சட்டம், 1972-யின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான வழக்குகளில் குற்றம் நிருபனமாகும் போது, மூன்றாண்டுகளுக்கு குறையாமலும் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் கிடைக்கப்பெறும், என ஈரோடு வனக்கோட்டம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
%20(1).jpg)
.jpg)