Type Here to Get Search Results !

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு விழா...


ஈரோடு மாவட்டம், வ.உ.சி. பூங்கா மல்லிகை அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், ஈரோடு நகர்ப்புற வட்டாரத்தைச் சேர்ந்த 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று (20.09.2026) நடைபெற்றது. விழாவை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கு. ஜெகதீஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் பேசிய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர், குழந்தையின் வளர்ச்சி கருவாக உருவான நாளிலிருந்தே தொடங்குகிறது என்றும், கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வசதி வாய்ப்பு குறைவான குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவதாகவும், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பயன்பெற்று வருவதாகவும் கூறினார்.



ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 15 வட்டாரங்களில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களும், மாவட்டம் முழுவதும் 2,080 குழந்தைகள் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 2026 நிலவரப்படி 8,534 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 15 வட்டாரங்களில் சுமார் 1,500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி உரிய காலங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சத்து மாத்திரைகள் மற்றும் சத்துமாவை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.



விழாவில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், ஐவகை உணவுகள் வழங்கப்பட்டதுடன், ஊட்டச்சத்து கண்காட்சி, மருத்துவப் பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி. ச.பவித்ரா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு நகர்புறம்) திருமதி. ஆ. மோகனவித்யா, கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.