சாலை, மின்பராமரிப்பு பணிகளை பருவமழைக்கு முன் விரைந்து மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல்...
nammaerode24x7tamilnewsSeptember 12, 2026
0
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சாலைப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் – அமைச்சர் ம.விஜய் பாலாஜி அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாநகராட்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.க.ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பவானி முதல் ஈரோடு வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகள், ஈரோடு–சென்னிமலை, ஈரோடு–கரூர் மற்றும் ஈரோடு–பெருந்துறை சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாசூர் மற்றும் கொடுமுடியில் இரயில்வே மேம்பாலங்களை விரைந்து அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறையின் சார்பில் பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் கட்டிடப் பிரிவு, தாய்சேய் பராமரிப்பு மையம் மற்றும் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கும் பணிகள், பவானிசாகர் பயிற்சி மையத்தில் விளையாட்டு அரங்கம், தாளவாடியில் தானியங்கி கிடங்கு மற்றும் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மின்சார வாரியத்தின் சார்பில் கொங்கு கல்லூரி அருகில் துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் அமைத்தல், நரிப்பள்ளம் துணை மின் நிலையத்திலிருந்து அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களுக்கு மின்பாதைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மின்பராமரிப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தற்போது மற்றும் எதிர்கால போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாருதல், மின்பாதைகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் தேவையற்ற புதர்ச் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அசோகபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாருதல் மற்றும் புதர்ச் செடிகளை அகற்றுதல் தொடர்பாக அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திருமதி.தேன்மொழி, (வளர்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.