Type Here to Get Search Results !

மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமினை இன்று அமைச்சர்‌ சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்‌.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, அரசு மாதிரி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று (26.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தலைமையில்‌, ஈரோடு மாநகராட்சி மேயர்‌ சு.நாகரத்தினம்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவன தலைவர்‌ குறிஞ்சி.என்‌.சிவகுமார்‌, துணை மேயர்‌ வே.செல்வராஜ்‌, ஆகியோர்‌ முன்னிலையில்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பில்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி அவர்கள்‌, மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்‌.
இம்முகாமில்‌ அமைச்சர்‌ சு.முத்துசாமி அவர்கள்‌ தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆலோசனையின்படி, பல்வேறு துறைகளிலே மக்களுக்கு தேவையான பணிகளை அன்றாடம்‌ செய்து வருகிறார்கள்‌. குறிப்பாக இன்றைக்கு 0 முதல்‌ 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக இம்முகாம்‌ நடத்தப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசின்‌ சார்பாக அவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இதிலே பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பாக சர்வே எடுக்கப்படுகிறது. அவ்வாறு சர்வே எடுக்கும்‌ பொழுது, மாற்றுத்திறன்‌ உடைய குழந்தைகள்‌ குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இப்புள்ளி விபரத்தினை வைத்துக்‌ கொண்டு, அவர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா, அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும்‌ உதவிகள்‌ தேவைப்படுகின்றதா என்பது குறித்து மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகம்‌ மூலம்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஏற்கனவே மாநில அளவில்‌ அடையாள வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில்‌ அடையாள அட்டை வழங்குவதற்கு இது ஒரு வழிவகை செய்கிறது. நாடு முழுவதும்‌ எவ்வளவு மாற்றுத்திறனாளிகள்‌ இருக்கின்றார்கள்‌, என்ன வயதில்‌ இருக்கிறார்கள்‌, எப்படிப்பட்ட பிரச்சனைகள்‌ அவர்களுக்கு இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்‌, அதே போல்‌ அந்த கணக்கை எடுத்து, மத்திய அரசிடம்‌ வழங்கும்‌ பொழுது, எதிர்காலத்தில்‌ ஏதாவது ஒரு திட்டம்‌ வரும்பொழுது, மாநில அரசின்‌ மூலம்‌ இக்கணக்கை வழங்கி அவர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத்தர இயலும்‌. இதில்‌ மருத்துவத்துறை தங்களை முழுமையாக இணைத்துக்‌ கொண்டு, அவர்களுக்கு தேவையான அத்தனை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்‌. இம்முகாமில்‌ கண்டறிப்படும்‌ குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல்‌, உதவி உபகரணங்கள்‌ வழங்குதல்‌, அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனம்‌ மூலம்‌ அளவீட்டு முகாம்‌ நடத்தப்பட்டு, தேவைப்படும்‌ மாணவ, மாணவியர்களுக்கு உதவி உபகரணங்கள்‌ வழங்கப்படவுள்ளது. இம்முகாமில்‌ ஈரோடு மாவட்டத்தில்‌ உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச்‌ சார்ந்த 0 முதல்‌ 18 வயது வரை உடைய 36876 மாற்றுத்திறன்‌ கொண்ட பயனாளிகள்‌ பயன்பெறுவார்கள்‌. அந்த வகையில்‌ இன்று நடைபெறும்‌ இம்முகாமில்‌ சுமார்‌ 300 நபர்கள்‌ கலந்து கொண்டு பயன்பெறுகிறார்கள்‌. மேலும்‌, விடுபட்டவர்களின்‌ விபரங்களை சேர்க்கவும்‌, அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கு பெற்று வழங்கவும்‌ பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பில்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. துறை அலுவலர்கள்‌ இதற்கான முழு முயற்சியினை எடுக்க வேண்டும்‌. இச்சிறப்பு மருத்துவ முகாமிற்கு பெற்றோர்கள்‌ 0 முதல்‌ 18 வயது வரை உள்ள தங்களது மாற்றுத்திறன்‌ கொண்ட பள்ளி வயது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெறலாம்‌. இம்மருத்துவ முகாமிற்கு எலும்பு மற்றும்‌ மூட்டு சிறப்பு மருத்துவர்‌, காது மூக்கு மற்றும்‌ தொண்டை சிறப்பு மருத்துவர்‌, மன நல மருத்துவர்‌, கண்‌ மருத்துவர்‌, உளவியல்‌ நிபுணர்‌, குழந்தைகள்‌ நல மருத்துவர்‌, இதர சிறப்பு மருத்துவர்கள்‌ கலந்து கொள்கின்றனர்‌ என தெரிவித்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌, மாவட்ட ஊராட்சி தலைவர்‌ நவமணி கந்தசாமி, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ ராமகிருஷ்ணன்‌, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ கோதைச்செல்வி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. நல்ல தகவல் வேலைதேடும் அனைவருக்கும் உபயோகமான ஒன்று

    ReplyDelete