Type Here to Get Search Results !

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முக்கிய அறிவிப்பு - செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் முத்துசாமி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறு கட்டுமானம் செய்யப்படும். மேலும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், மேற்படி சொத்துகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்கப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கு வாரியம் துணை நிற்கும். பன்னடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்குதலை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு அந்த அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அரசு வழங்கும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் நெரிசலை குறைக்கவும் மறுமேம்பாட்டிற்காகவும் அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும், ஒரு கலந்தாலோசகர் நியமிக்கப்படுவார். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்படும்.திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். தமிழகத்தில் 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில், நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்திட, திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட, இந்த நிதியாண்டில் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.