ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன் சார்பாக, நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
May 17, 2022
0
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் (16.05.2022 - 17.05.2022) நேற்று, இன்று 2 நாட்கள் ஜவுளி கடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூல் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் துறை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது,
ஜவுளி தொழில் சார்ந்த அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும்,
இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும் அதனை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜவுளி வியாபாரிகள் சங்கம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோஷியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், பனியன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், ஸ்கிரீன் பிரின்ட் அசோஷியேஷன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட 25 க்கும் மேற்பட்ட சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு நகரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை கடுமையாக உயர்ந்து வணிகமும் பாதியாக சரிந்து விட்டதாகவும்,
இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
ஜவுளி வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக ஈரோடு நகரில் மட்டும் சுமார் கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் கலைச்செல்வன் கருத்து தெரிவிக்கையில்- "பதுக்கலால் ஏற்படும் செயற்கை தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி பஞ்சுக்கான வரி உயர்வு ஆகியவையே நூல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் ,எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டும் எனவும்" கோரிக்கை விடுத்துள்ளார்.