மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் 366 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.18.64 இலட்சம் மதிப்பிட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
September 07, 2022
0
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கொமரப்பா
செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (07.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட
3 பள்ளிகளைச் சேர்ந்த 366 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.18.64 இலட்சம்
மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ,
மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு
திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக
பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ.36,000/- கோடி நிதியினை ஒதுக்கி
தந்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்று சட்டமன்ற
உறுப்பினராக இருந்த போது அரசு பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு
கட்டணமில்லாத பேருந்து பயணம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்ததன் அடிப்படையில் கட்டணமில்லாத பேருந்து பயண அனுமதி
வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூவலூர்
இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவியர்களுக்கு
ரூ.1000,/- ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
கொரோனா காலத்தில் பள்ளிக்கல்வி பாதிப்படைந்ததை தொடர்ந்து இல்லம்
தேடி கல்வித்திட்டம் குழந்தைகளின் வீட்டிற்கே கல்வியை கொண்டு வந்து
சேர்க்கும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. குழந்தைகள் படிக்கும்
காலத்தில் அவர்களின் திறமையை வெளி கொண்டு வரவேண்டும் என்கிற
வகையில் நான் முதல்வன் என்கிற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இத்திட்டம், திறனை மேம்படுத்தும் வகையில் படிக்கும் குழந்தைகள் அரசு
வேலைக்காக மட்டும் காத்திருக்காமல் தங்களுடைய திறனை தொழிற்கல்வியில்
மேம்படுத்திக் கொண்டு, நீங்கள் தான் எதிர்காலம் என்கிற வகையில் தலைசிறந்த
மாணவர்களை உருவாக்கவது நான் முதல்வன் என்கிற திட்டமாகும். மேலும் நுழைவு
தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள்
தேர்வில் தோல்வி அடையும் பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்துடன்
காணப்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் மனம் தளர்வு அடையாமல் தொடர்ந்து
தங்களது முயற்சியினை மேற்கொண்டு, வெற்றி பெற வேண்டும். மேலும், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பிற்காக
மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 127 அரசு /அரசு உதவி பெறும்
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8,357 மாணவர்கள் மற்றும் 9,196 மாணவியர்கள்
என மொத்தம் 17,553 எண்ணிக்கையில் ரூ.8,91,59,907/- மதிப்பீட்டிலான
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. மிதிவண்டி பயன்படுத்துவதன்
மூலம் நமது உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். அதன்படி, இன்றைய தினம்,
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்டட்ட கொமரப்பா செங்குந்தர்
மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 259 மாணவ, மாணவியர்கள், பசுவப்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 29 மாணவ, மாணவியர்கள் மற்றும் திப்பம்பாளையம்
அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 76 மாணவ, மாணவியர்கள் என 366 மாணவ,
மாணவியர்களுக்கு ரூ.18.64 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள்
வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்களின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும்
கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகின்ற
அரசின் நலத்திட்டங்களை மாணவச் செல்வங்கள் நல்லமுறையில் பெற்றுக் கொள்ள
வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.15 காமராஜர்
பகுதியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்ட பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து,
பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு
எண்.15 காமராஜர் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம்
மதிப்பீட்டில் சுமார் 400 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியினை
துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.எஸ்.செல்வம்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பெ.அய்யண்ணன், சென்னிமலை பேரூராட்சித்
தலைவர் திருமதி.ஸ்ரீதேவி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
திருமதி.காயத்ரி இளங்கோ, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) திரு.கணேசன்,
உதவி செயற்பொறியாளர் திரு.வரதராஜ், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர்
திருமதி.அ.ஆயிஷா, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து
துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.