தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
- குறள் 399
தாங்கள் இன்பம் அடையும் கல்வியால் உலகம் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றவர் மேலும் மேலும் கற்க விரும்புவார் என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தொழிற்கல்வி பயலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1559 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
மேலும், மாணவ, மாணவியர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவ, மாணவியர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
மேலும், டாடா டெக்னாஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ்
நிறுவனமும், தமிழ்நாடு அரசும் முதலீடு செய்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
இந்த மையங்களில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்., நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன். மேனுபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங். இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற பயிற்சிகள் பயிற்றுநர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் காணொலி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இத்தொழில் பயிற்சி மையம் மூலம் பயன் பெறும் மாணவ, மாணவியர் தெரிவித்ததாவது:
1. திருமதி.கு.சுமதி.(கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவி).
நான் பெரிய கொடிவேரியில் வசிக்கிறேன். நான் இப்பொழுது கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மின்சாரபணியாளர் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தற்பொழுது வந்த டாடா நிறுவனத்தில் உள்ள உற்பத்தி செயல்முறை ரோபோட்டிக்ஸ், கட்டுபாடு மற்றும் தானியங்கி மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர், மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், பயிற்சியாளர்கள் இந்த பிரிவு படித்தால் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது என அறிந்து கொண்டேன் . இது மாணவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும் இனி வரும் காலத்தில் இந்த நிறுவனத்தில் படித்தால் முன்னணி நிறுவனங்களில் வேலை பெறலாம் எங்களது வாழ்க்கை தரம் உயரும் என தெரிவித்தார்.
2.திரு.வி.குருபிரசாத் (கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவன்)
நான் சத்தியமங்கலத்தில் வசித்து வருகிறேன். நான் இப்பொழுது கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குளிர்பதனம் மற்றும் தட்பவெட்ப நிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் பிரிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். தற்போது வந்த டாடா நிறுவனத்தில் உள்ள உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தானியங்கி, தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர், மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர பிரிவில் படித்தால் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது, என அறிந்து கொண்டேன். இது பணியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இனி வரும் காலத்தில் இந்த பிரிவுகளில் படித்தால் நல்ல நல்ல கைதொழில் மற்றும் தொழிற்சாலைகளில் நல்ல வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் உயர உறுதுணையாக இருக்கும் எனவும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.