ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, பெரும்பள்ளம் (காசிபாளையம்) அணைக்கட்டிற்கு வரும் கசிவுநீரை நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் நேற்று (09.10.2024) மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், பாசனத்திற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (09.10.2024) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு சார்பில் 8 பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழ்பவானி பிரதான கால்வாய் மண் கால்வாய் என்பதால் கால்வாயிலிருந்து வெளியேறி ஓடைகளில் வீணாக செல்லும் கசிவு நீரை பயன்படுத்தும் நோக்குடன் கீழ்பவானி பாசன பகுதியில் 34 கசிவு நீர் அணைக்கட்டுகள் கட்டப்பட்டு அதன் மூலம் 17285 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. ஈரோடு "இ" கிராமத்தில் அமைந்துள்ள பெரும்பள்ளம் கசிவு நீர்திட்ட அணைகட்டு மேற்கண்ட 34 கசிவு நீர் திட்ட அணைகட்டுகளில் பிரதான திட்டமாகும். பெரும்பள்ளம் அணைகட்டிலிருந்து பிரியும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் 12 கி.மீ நீளம் பாய்ந்து 2545 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் 1968 ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாய்க்காலின் முதல் 6 கி.மீட்டர் ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுமார் 30 அடி ஆழத்தில் செல்வதால் குப்பைகளாலும், மண் திட்டுகளாலும் கால்வாய் தூர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
எனவே மேற்கண்ட கால்வாயை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் நோக்குடன் நீர்வளத்துறை மூலம் ரூ.21.00 இலட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்து 30 அடி ஆழத்தில் உள்ள குப்பைகள் மற்றும் மண் திட்டுகளை நவீன ராட்சத இயந்திரத்தை கொண்டு சுமார் 4.00 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணியை கடந்த 10.09.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தூர்வாரும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் பெரும்பள்ளம் அணைக்கட்டிற்கு வரும் கசிவுநீரை நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் வினாடிக்கு 40 கனஅடி வீதம் நீரை பாசனத்திற்காக இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2545 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதுடன் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4-ல் உள்ள வார்டு எண்கள் - 54, 55, 56, 57, 58, 59, 60 மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட 46-புதூர், லக்காபுரம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி ஆகிய ஊராட்சிகளுக்குட்ப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் செரிவூட்டப்படும்.
மேலும், பெரியசடையம்பாளையத்தில் 451 குடும்ப அட்டைகள் மூலம் 1309 நபர்கள் பயன்பெறும் வகையில், பகுதிநேர நியாயவிலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சி.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என்., ஈரோடு மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பி.கே.பழனிசாமி (1-ம் மண்டலம்), சசிகுமார் (3-ம் மண்டலம்), தண்டபாணி (4-ம் மண்டலம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.