Type Here to Get Search Results !

மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.


ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, கள்ளுக்கடை மேடு குயவன்திட்டு பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் இன்று (15.10.2024) மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நாடார்மேடு பகுதியில் மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.


இந்த ஆய்வின்போது, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

ஈரோடு மாவட்டத்தில், மழை காலங்களில் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ள 44 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் தயார் நிலையில் அனைத்து பணிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். மாநகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என 7 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்குவதற்கு அதே பகுதியின் அருகில் 7 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் வெள்ளத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு, பகல் என பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்டலத்திற்கு 100 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 400 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ள 6 JCB, 10 ஆயில் இஞ்ஜீன், 6 மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர் கொண்ட 8 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.


மேலும், ஈரோடு மாநகராட்சியில், உள்ள 8 ஓடைகளில் சுமார் 30.00 கி.மீ தூரத்திற்கு தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரை சுமார் 19.65 கி.மீ தூரம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மண்டலம்-4க்குட்பட்ட நாடார்மேடு பகுதி வழியாக செல்லும் காசிபாளையம் ஓடை சுமார் 5.50 கி.மீ நீளம் ஆகும். இதில் வார்டு எண் 56க்குட்பட்ட பகுதியில் சுமார் 2.40 கி.மீ நீளத்திற்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடார்மேடு காய்கறி பள்ளம் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் உட்புகாமல் அகலப்படுத்தப்பட்டுள்ளது. வார்டு எண்-44 மற்றும் வார்டு எண்-43 அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகாவண்ணம் பெரும்பள்ளம் ஓடை பகுதியில் ஒளிரும் ஈரோடு என்ற தனியார் அமைப்பின் மூலம் சுமார் பெரும்பள்ளம் ஓடை 5 கி.மீ நீளம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள பெரிய சடையம்பாளையம், முத்தம்பாளையம், கருவில்பாறைவலசு, கனிராவுத்தர்குளம், எல்லப்பாளையம், கங்காபுரம் ஆகிய 6 குளங்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் தூர்வாரப்பட்டு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மொத்த பரப்பளவு 11.40 ஹெக்டர் ஆகும்.


தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், ஈரோடு மாநகராட்சி, நாடார்மேடு பகுதியில் மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் என்., மாநகர பொறியாளர் விஜயகுமார், மண்டல குழுத்தலைவர்கள் சசிகுமார் (3) மண்டலம்), குறிஞ்சி.என்.தண்டபாணி (4-ம் மண்டலம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.