சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான மாவீரன் பொல்லான் அவர்களின் 256-வது பிறந்த நாளையொட்டி, இன்று (28.12.2024) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி பேரூராட்சி, ஜெயராமபுரத்தில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் என்று அனைவராலும் போற்றப்படுகிற பொல்லான் அவர்களுடைய 256-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஜெயராமபுரத்தில் அன்னாருக்கு மரியாதை செலுத்தும் அரசு நிகழ்ச்சி இன்று (28.12.2024) நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (20.12.2024) அன்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லான் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திட அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள். விரைவாக இந்த பணி துவங்க இருக்கிறது. அடுத்த ஓராண்டிற்குள்ளாக இந்த பணிகள் முடிவடையும். இது அரங்கமாக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமையவுள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அரங்கம் அமைய இடத்தினை வழங்கியவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி, துணை மேயர் வே.செல்வராஜ், மாநகாட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் திருமதி.அம்பிகாவதி விஸ்வநாதன், மாவீரன் பொல்லான் வாரிசுதாரர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திருமதி.செ.கலைமாமணி, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.