98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025ஐ முன்னிட்டு, இன்று (23.01.2025) தேர்தல் நடத்தும் அலுவலர் / ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத 85- வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணியினை பார்வையிட்டார்.
98 - ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 05.02.2025 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் ஓட்டு சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2529 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 1570 வாக்காளர்களும் என 4099 நபர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏதுவாக 15.01.2025-க்கு முன்னரே 12டி (12D) படிவம் வழங்கப்பட்டு, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 209 நபர்கள் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என 256 வாக்காளர்கள் ஒப்புதல் பெற்றுள்ளார்கள். சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு இன்று முதல் (23.01.2025), வாக்குச்சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபார்த்து, அவ்விபரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம்/கைரேகை பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டினை வழங்கி, தபால் வாக்கினை பெற்று வருகிறார்கள். மேலும், தபால் வாக்குகள் செலுத்தும் பணி 24.01.2025, 25.01.2025 மற்றும் 27.01.2025 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறும்.
அதனடிப்படையில் இன்றைய தினம் தேர்தல் நடத்தும் அலுவலர் / ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் 98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட வீரப்பன்சத்திரம் ஆண்டவர் வீதியில் 85 வயதான காளியப்பன் அவர்கள் தபால் வாக்கு செலுத்தியதை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து பெரியவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்குசாவடியினை பார்வையிட்டு, கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பழையபாளையம் பண்ணை நகர் பகுதியில் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதையும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.