ஈரோடு மாநகராட்சியின் கூட்ட அரங்கத்தில் இன்று (21.01.2025) 98, ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செலவிடப்படவுள்ள கணக்குகளை பராமரித்து தாக்கல் செய்வது குறித்தான கூட்டம், தேர்தல் செலவினப் பார்வையாளராக (Expenditure Observer) நியமிக்கப்பட்டுள்ள தினேஷ்குமார் ஜாங்கிட் அவர்கள் தலைமையில், 98, ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மனிஷ் என். அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
05.02.2025 அன்று நடைபெற உள்ள 98, ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக 46 பேர் களத்தில் உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலகம் செலவுகளை பதிவு செய்வதற்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் பதிவேடுகள் மற்றும் தேர்தல் செலவு தொடர்பான விதிகளடங்கிய கையேடுகளையும் வழங்கியுள்ளது.
வேட்பாளர்கள்/முகவர்கள் மற்றும் தேர்தல் கணக்கு குழு அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், வேட்பாளர்களது தேர்தல் கணக்கு விவரங்களை தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு செய்து. தேர்தல் செலவின கணக்கில் எத்தகைய செலவினங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்தும், சரியான முறையில் கணக்குகளை பராமரிக்கும் விவரங்களையும் விளக்கியதோடு, தேர்தல் செலவினம் குறித்த சந்தேகங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் அவர்களின் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை வழங்கினார்.
மேலும், கணக்கு குழுவினர், கணக்குகளை பராமரிக்கும் விரிவான நடைமுறைகளை வேட்பாளர்களுக்கு/முகவர்களுக்கு விளக்கி கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தேர்தல் செலவின கணக்குகளை மீண்டும் 27.01.2025 மற்றும் 03.02.2025 ஆகிய தேதிகளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் செலவினப் பார்வையாளர் தினேஷ்குமார் ஜாங்கிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.