98.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025-யொட்டி இன்று (28.01.2025) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2025 அறிவிக்கப்பட்டு, 05.02.2025 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். மேற்படி வாக்காளர்களுக்கு கடந்த 26.01.2025 முதல் 237 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வாக்காளர் தகவல் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், 26.01.2025 மற்றும் 27.01.2025 ஆகிய தேதிகளில் 75,288 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் தகவல் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணி 31.01.2025 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (28.01.2025) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 20 டவர்லைன் காலனி மற்றும் திருமால்நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் (Booth Slip) வழங்கப்பட்டு வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டு பொறுப்பு அலுவலர் சசிகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.